சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை: வேகமெடுக்கும் காவல்துறையின் திட்டம்

மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

சென்னையில் கேட்கும் திறனற்ற மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை தமிழகம் முழுவதுமே அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் பற்றி தாய் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், லிப்ட் ஆப்ரேட்டர் ரவிக்குமார் உள்ளிட்ட 17 பேரை கைது செய்துள்ளனர். இவர்களை வரும் 31 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், முக்கிய‌ குற்றவாளியான ரவிகுமாரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பத்தாண்டுகளாக லிப்ட் ஆப்பரேட்டராக இருந்த ரவிக்குமார்தான் சிறுமியை முதலில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்தே பிற காவலாளிகள் அபிஷேக், சுகுமாறன், பிரகாஷ், பிளம்பர் சுரேஷ் மற்றும் வீட்டு வேலைக்காரர் ராஜசேகர், ஆகியோர் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், இவர்களுக்கு உடந்தையாக இருந்த காவலாளிகள் முருகேஷ், பழனி, லிப்ட் ஆப்ரேட்டர்கள் பரமசிவம், பாபு, தீனதயாளன், பிளம்பர்கள் ஜெய்கணேஷ், ராஜா, சூர்யா, எலக்ட்ரீஷியன்கள் ஜெயராமன், உமாபதி, மற்றும் தோட்டவேலை செய்யும் குணசேகர் ஆகியோரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த வழக்கின் தீவிரத்தன்மையாலும்‌ கொடூரத்தாலும் இதனை விரைவாக விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித்தரும் முயற்சிகளில் காவல்துறையினர் தீவிரம் காட்டிவருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருமாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை, சிறுமியின் ஆடைகள், அந்த குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்ட சிரிஞ்சுகள், குளிர்பான பாட்டில்களை ஆய்வுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

இந்த கொடூரச்செயலை கேள்விபடுவோர் தொடங்கி அனைவரிடமும் எழும் முதல் கேள்வி இவர்கள் வீட்டில் பெண் குழந்தைகளே இல்லையா என்பதுதான்‌. ஆனால் முரணாக, சம்பவத்தின் முக்கிய முதல் குற்றவாளியும், சிறுமியை மற்றவர்கள் தவறாக பயன்படுத்திக்கொள்ள வழி ஏற்படுத்திக் கொடுத்தவருமாக சந்தேகிக்கப்படும் ரவிக்குமாருக்கு திருமண வயதில் ஒரு பெண்ணும் உள்ளது என்பதுதான் வேதனை.

இதற்கிடையே சம்பவம் நடந்த குடியிருப்பில் பாதுகாப்பு சேவைகளை செய்துவந்த FOCUS செக்யூரிட்டி நிறுவனம், குடியிருப்பின் பாதுகாப்பு பொறுப்பில் இருந்து விலகிக்கொண்டுள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தை அணுகி கேட்டபோது, ஏற்கனவே இருந்த செக்யூரிட்டி நிறுவனத்திடம் இருந்து ஒன்றரை மாதத்திற்கு முன்புதான் தாங்கள் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றதாகவும், இதனால் பழைய நிறுவனத்தில்‌ இருந்த பணியாளர்களே தொடர்வதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணையில் இருப்பதால் வேறு எதுவும் சொல்ல இயலாது என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. இதற்கிடையே குற்றத்தில் தொடர்புடையதா‌க கைது செய்யப்பட்ட காவலாளிகளின் அடையாள ஆவணங்கள், உள்ளிட்ட தகவல்களை காவல்துறை விசாரித்து வருகிறது.

குற்றத்தில் தொடர்புடையவர்கள்‌ சார்ந்த UK FACILITY SERVICES நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளாக அந்த குடியிருப்பில் பிளம்பிங், எலக்ட்ரிக்கல் வேலைகளை மேற்கொண்டு வந்ததாகவும், அந்த நிறுவன ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *