காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, வயதுமுதிர்ந்த சிறைக்கைதிகள் விடுதலை செய்ய மத்திய அரசு முடிவு

அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை ஒட்டி, நாடு முழுவதும் சிறைகளில் இருக்கும் 55 வயதுக்கு மேற்பட்ட பெண்களையும் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களையும் விடுதலை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தண்டனைக் காலத்தில் பாதியை அவர்கள் கழித்திருந்தால் விடுதலை செய்யப்படுவார்கள். பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆயினும் வரதட்சணைக் கொடுமை, பாலியல் பலாத்காரம், மனிதர்களை கடத்தல், மற்றும் பொடா, தடா போன்ற சட்டங்களில் கைதானவர்கள் இத்திட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட மாட்டார்கள்.

மகாத்மாவின் 150வது  பிறந்தநாள் ஓராண்டு கொண்டாடப்படுவதால், காந்தி பிறந்த தினமான வருகிற அக்டோபர் 2ம் தேதி முதல் கட்டமாகவும்,  சத்தியாகிரக நினைவு நாளான ஏப்ரல் 10ம் தேதி இரண்டாம் கட்டமாகவும், அடுத்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி மூன்றாம் கட்டமாகவும் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்.இதே போல் 70 சதவீத ஊனம் கொண்ட மாற்றுத்திறனாளிகளையும் விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசுகள் இதற்கென குழுவை அமைத்து, விடுதலையாகும் நபர்கள் பட்டியலைத் தேர்வு செய்யுமாறு உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *