13 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை 5 ரூபாய் குறைந்தது..!

பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசுகள் குறைப்பதாக மத்திய அரசு அறிவித்ததையடுத்து பல்வேறு மாநில அரசுகளும் வரிக்குறைப்பு செய்துள்ளன. இதனால் 13 மாநிலங்களில் நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைந்துள்ளது.

நாளுக்கு நாள் ஏறுமுகமாகவே காட்சியளிக்கும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் குறைக் வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், பெட்ரோல் டீசல் லிட்டருக்கு இரண்டு ரூபாய் 50 காசுகள் குறைப்பதாகவும், இந்த புதிய விலை மாற்றம் நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லீ நேற்று அறிவித்தார்.

இதே அளவுக்கு மாநில அரசுகளும் வாட் வரிகளைக் குறைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்திய எதிர்க்கட்சிகள் தாங்கள் ஆளும் மாநிலங்களில் இப்போது விலைக்குறைப்பை செய்யட்டும் என்று அருண் ஜேட்லீ வலியுறுத்தினார்.

அருண்ஜேட்லியின் கோரிக்கையை ஏற்று பாஜக ஆளும் உத்தரகாண்ட், சட்டிஸ்கர், மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம், இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, குஜராத், திரிபுரா , ஜார்க்கண்ட் , கோவா, ஹரியானா, ராஜஸ்தான், அருணாசலப்பிரதேசம் ஆகிய 13 மாநிலங்களில் இரண்டு ரூபாய் 50 காசுகள் வரை வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாநிலங்களில் நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை குறைந்துள்ளது.

இதனிடையே, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் காயம் அடைந்த மக்களுக்கு பேண்ட் எய்ட் போடுவது போல இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. விரைவில் 4 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அச்சம் காரணமாக மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்திருப்பதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றம்சாட்டியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *