தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை..! விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், சில சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும், வருகிற 7-ஆம் தேதி அன்று மிக அதிக கனமழை பெய்யுமென்றும் ரெட் அலர்ட் எனப்படும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று பகலில் மழை கொட்டித் தீர்த்த நிலையில் இரவில் கிண்டி, ராயப்பேட்டை,மந்தைவெளி உள்ளிட்ட சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது.

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று 3வது நாளாக பலத்த மழை பெய்தது. வேங்கிக்கால், மல்லவாடி, கீழ்பெண்ணாத்தூர், வேட்டவலம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழையால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, விவசாயம் செழிப்படையும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி, நாங்குநேரி உள்பட பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் அவதி அடைந்தனர். இதையடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவில், தோவாளை, பூதபாண்டி உள்பட பல இடங்களில் பலத்த மழை பெய்ததால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நாகர்கோவிலில் வேப்பமூடு சந்திப்பில், தனியார் கட்டிடம் ஒன்றின் தரைகீழ் தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்களும், இருசக்கர வாகனங்களும் தண்ணிரில் மூழ்கின. வாகன ஓட்டிகள் அதை இயக்க முயன்றபோது, அவை பழுதானதால் தவிப்புக்குள்ளாகினார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்த நிலையில், நேற்று பலத்த மழை பெய்தது. இதனால், சுற்றுலாப் பயணிகளுக்கு உற்சாகமளிக்கும் படகு ஏரி வெறிச்சோடி காணப்பட்டதுடன், ஏராளமான கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதுடன், பூங்கா செல்லும் சாலையில் மண் சுவர் இடிந்துவிழுந்து, சில கடைகளும் சேதமடைந்தன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்றும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, சாமல்பட்டி, கல்லாவி, பாரூர்,சிங்காரப்பேட்டை பகுதிகளில் பரவலாக நள்ளிரவு முதல் மழை பொழிந்து வருகிறது. ஆங்காங்கே சாலைகளில் நீர் தேங்கியுள்ளது.

ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அச்சுந்தன் வயல்,காவனூர், பேராவூர், பட்டினம்காத்தான், திருப்புல்லானி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் மிதமானது முதல் கனமான மழை வரை பெய்து வருகிறது. அதிகபட்சமாக மண்டபத்தில் 46 மில்லி மீட்டரும் குறைந்த பட்சமாக கமுதியில் 1 புள்ளி 2 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக மழையில்லாமல் வறட்சியால் தவித்துவந்த ராமநாதபுரம் மக்கள் தற்பொழுது பெய்யும் மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தாலும் , நேற்று பிற்பகல் முதல் நெல்லை, பாளையங்கோட்டை , தென்காசி , செங்கோட்டை , ராதாபுரம் உள்பட பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் அதிக பட்சமாக நம்பியாறு பகுதியில் 105 மில்லி மீட்டரும் , பாளையங்கோட்டையில் 70 புள்ளி 2 மில்லி மீட்டரும்,நெல்லையில் 68 மில்லி மீட்டரும், ராதாபுரத்தில் 64 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. இருப்பினும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை இல்லாததால் அணைகளுக்கு நிர்வரத்து இன்றி நீர்மட்டத்தில் பெரியளவில் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் காலை 5 மணி முதல் லேசான மழை பெய்து வந்த நிலையில் திடீரென கனமழையாக உருவெடுத்தது. ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை பெய்கிறது.

நாகை மாவட்டம் வேதாரண்யம், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், செம்போடை, கோடியக்கரை, கரியாப்பட்டினம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. வேதாரண்யத்தில் மழையை நம்பி மட்டும் நெல்சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *