மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரர் பிரித்வி ஷா சதம் அடித்து அசத்தல்

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரர் பிரித்வி ஷா சதம் அடித்ததால், இந்திய அணி முதல் நாளில் 4 விக்கெட் இழப்பிற்கு 364 ரன் என்ற வலுவான தொடக்கத்தை தந்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு இந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. நேற்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் கோலி, டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுலும், புதுமுக வீரர் பிரித்வி ஷாவும் களமிறங்கிய நிலையில், முதல் ஓவரிலேயே லோகேஷ் ராகுல் டக் அவுட் ஆனார். 2வது விக்கெட்டுக்கு களமிறங்கிய புஜாரா கை கொடுத்ததால், தொடக்கம் முதலே அதிரடி காட்டிய பிரித்வி ஷா, மளமளவென ரன்களை குவிக்கத் தொடங்கினார்.

பந்தை நாலாபுறமும் பிரித்வி ஷா சிதறடித்ததால், உணவு இடைவேளையின் போது இந்தியா ஒரு விக்கெட்டுக்கு 133 ரன் எடுத்திருந்தது. நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி ஷா 99 பந்துகளில் சதத்தை எட்டி, அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த இளம் வீரர் என்ற சிறப்பை பெற்றார். மறுமுனையில், புஜாரா 86 ரன்னில் ஆட்டமிழந்ததால், கேப்டன் விராட் கோலி, பிரித்வி ஷாவுடன் ஜோடி சேர்ந்தார்.

இருவரும் சிறப்பாக விளையாடிய நிலையில், 154 பந்துகளில் 134  ரன் எடுத்திருந்த பிரித்வி ஷா சுழற்பந்து வீச்சாளர் தேவேந்திர பிஷூவின் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர், களமிறங்கிய ரஹானே 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *