மேகதாது தடுப்பணைக்கான ஆய்வு அறிக்கை தயாரிக்கும் பணியை கர்நாடக அரசு துவங்கியுள்ளது

மேகதாதுவில் காவிரியில் அணை கட்டத் திட்டமிட்டுள்ள பகுதியைக் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இதன் மூலம் மேகதாது தடுப்பணைக்கான ஆய்வு அறிக்கை தயாரிக்கும் பணியை கர்நாடக அரசு துவங்கியுள்ளது.

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் அருகே மேகதாது என்னுமிடத்தில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டக் கர்நாடக அரசு திட்டமிட்டு வருகிறது. 67டிஎம்சி கொள்ளளவுள்ள இந்த அணையில் தேக்கப்படும் தண்ணீரைக் குடிநீர்த் தேவைக்கும் மின்னுற்பத்திக்கும் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்குத் தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், கர்நாடகம் விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

 

இந்நிலையில் கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் மேகதாதுக்குச் சென்று அணை கட்டத் தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதியைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த இடத்தை ஏற்கெனவே பார்வையிட்டுள்ள பொறியாளர்கள் தேவையான நிலப்பகுதியை வரையறுத்துக் குறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அணைத்திட்டத்துக்கு தேவைப்படும் நாலாயிரத்து 716எக்டேர் நிலத்தில் 90விழுக்காடு பாதுகாக்கப்பட்ட காட்டுப்பகுதி என்றும், 10விழுக்காடு வருவாய்த் துறையின் கீழ் உள்ள பகுதி என்றும் நீர்ப்பாசனத் துறைப் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் ஒப்புதலின்றிக் காவிரியில் எந்தவொரு நீர்ப்பாசனத் திட்டத்தையும் கர்நாடக அரசு மேற்கொள்ள முடியாது. தமிழகத்தின் ஒப்புதலின்றி விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளித்துள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடுத்துள்ளது. மேகதாது அணைத் திட்டத்தைக் கைவிடக் கோரித் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனாலும் கூட திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை கர்நாடகா துவங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *