நாகை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

கஜா புயல் கரையைக் கடக்கும் நாகை மாவட்டத்தில், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாகை மாவட்டத்தில் 75 பேர் கொண்ட பேரிடர் மீட்புக் குழுவும், ஃபர்ஸ்ட் ரெஸ்பாண்டர்ஸ் எனும் பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் 4 ஆயிரத்து 500 பேரும் மீட்புப் பணிக்குத் தயார் நிலையில் உள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கெனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகையில் தாழ்வான, பாதிக்கக்கூடிய பகுதிகளாக 38 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் 86 ஆயிரத்து 964 பேர் வசிப்பதால் அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்களை தங்கவைக்க 9 பன்நோக்கு பேரிடர் மையம் தயார் நிலையில் உள்ளன. 22 புயல்பாதுகாப்பு மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள், சமூக நலக் கூடங்கள், திருமண மண்டபங்கள் என 627 பொதுக்கட்டிடங்கள் நிவாரண முகாம்களுக்காக திறக்கப்பட்டுள்ளன. தேவையான உணவு, குடிநீர் ஏற்பாடு செய்ய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 29 நடமாடும் மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் உள்ளன.

அரசு பெண் பணியாளர்கள் 653 பேர் முதல் நிலை பொறுப்பாளர்களாக முன்னெச்சரிக்கைப் பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அரசுப் பணியாளர்கள் உள்ளிட்ட 4 ஆயிரத்து 454 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கால்நடைகளுக்காக 2 ஆயிரத்து 20 பொறுப்பாளர்களும், கால்நடை மருத்துவர்கள் அடங்கிய 28 குழுக்களும், அவற்றுக்கான 212 மையங்களும் தயாராகி வருகிறது. தீயணைப்புத்துறை தலா 10 நபர்கள் உள்ளடக்கிய 9 குழுக்களாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில பேரிடர் பயிற்சி பெற்ற தலா 10 காவலர் அடங்கிய 8 குழுக்கள் பணியாற்றும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. தமிழக மின்வாரியம் மூலம் 6 ஆயிரம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. மீன்வளத்துறை மூலம் 54 படகுகளும் மீட்புக்குத் தயாராக உள்ளன.

1 லட்சத்து 19 ஆயிரத்து 830 மணல் மூட்டைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. புயலால் சேதமடையும் மரம், கட்டிடங்களை அகற்ற 88 ஜேசிபி இயந்திரங்களும், 56 மர அறுக்கும் கருவிகள் தயார் நிலையில் உள்ளன. நாகையில் காலை முதலே கடல்சீற்றமாக காணப்படுகிறது. கஜா புயல் நெருங்குவதால் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *