சிலை பதுக்கல் வழக்கில் முன்ஜாமீன் கோரி ரன்வீர் ஷா, கிரண் ராவ் மனு

தொழிலதிபர்கள் ரன்வீர் ஷா மற்றும் கிரண் ராவ் ஆகியோர் சிலைகள் வாங்கியதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், இருவரது முன் ஜாமீன் மனுவையும் நாளை மறுநாளைக்கு ஒத்திவைத்தது.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷா வீடு மற்றும் பண்ணை வீடுகளில் சோதனை நடத்திய சிலைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், அங்கிருந்து ஏராளமான பழங்கால சிலைகள் மற்றும் கலைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், ரன்வீர் ஷாவின் தோழி கிரண் ராவின் போயஸ் தோட்ட இல்லத்திலும் சோதனை நடத்திய சிலைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், அங்கிருந்தும் சிலைகள், பழங்கால கல்தூண்கள் மற்றும் கலைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இருவரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு, சிலைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். இந்நிலையில், இருவரும் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, உயர்நீதிமன்றத்தில் சிலைகள் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ரன்வீர் ஷா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பழங்கால சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் மீதான ஆர்வத்தால், கடந்த 1993ஆம் ஆண்டு முதல் அவற்றை சேகரித்து வருவதாகவும், அதற்குறிய ஆவணங்கள் மற்றும் தொல்லியல் துறை சான்றிதழ் ஆகியவை இருப்பதாகவும் வாதிட்டார்.இதே கருத்தை கிரண் ராவின் வழக்கறிஞரும் முன்வைத்தார்.

இதையடுத்து, சிலைகள் வாங்கியதற்கான ஆவணங்கள் மற்றும் தொல்லியல் துறை சான்றிதழ்கள் ஆகியவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *