அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் 44 லட்ச ரூபாய் பறிமுதல்

தீபாவளி நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசு அலுவலகங்களில் லஞ்ச வசூல் உச்சகட்டத்தை எட்டி உள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து, நேற்று போலீசார் ஒரே நேரத்தில் பல ஊர்களிலும் சோதனை நடத்தினர். இதில் 44 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தீபாவளி காலகட்டத்தில் அரசு அலுவலங்களில் லஞ்ச வசூல் அதிகரிப்பதாக அடுத்தடுத்து புகார்கள் வந்தன.

குறிப்பாக வட்டார போக்குவரத்து அலுவலங்கள், நகராட்சி அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் வசூல் வேட்டை உச்சத்தை எட்டியதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலங்களிலும், புகாருக்கு உள்ளான அரசு அலுவலங்களிலும் அதிரடி சோதனை நடத்த திட்டமிடப்பட்டது.

இதையடுத்து சென்னையில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகங்கள், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலம், ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம், நாமக்கல்ர தேவகோட்டை பத்திர பதிவு அலுவலங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இதே போன்று நீலகிரி பொதுப்பணித்துறை அலுவலகம், வேலூர் ஆவின் பொது மேலாளர் அலுவலகம், பழனி அறநிலையத்துறை துணை ஆணையர் அலுவலகம் ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்றது. இது தவிர திருவண்ணாமலை, கடலூர், கோவில்பட்டி, ஓசூர், தென்காசி, ஸ்ரீரங்கம், புதுக்கோட்டை, தேனி, கடலூர், கோவை, ஈரோடு, மேட்டூர், மயிலாடுதுறை, கரூர் ஆகிய 13 ஊர்களில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரே நேரத்தில் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

ஒரே நேரத்தில் 24 அலுவலகங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 44 லட்சத்து 30 ஆயிரத்து 4 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து அரசு அதிகாரிகள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதனிடையே கோவை வட்டார போக்குவரத்து அலுலவகத்தில் போலீசாரின் திடீர் சோதனையின் போது போக்குவரத்து ஆய்வாளர் கவுந்தம் பாடியைச் சேர்ந்த பாபு என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, பரிசோதித்த மருத்துவர்கள் நெஞ்சுவலியால் பாபு இறந்து விட்டதாக கூறினர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *