தாஜ்மஹால் டிக்கெட் விலை 5 மடங்கு திடீர் உயர்வு

தாஜ்மஹால் டிக்கெட் விலையை 5 மடங்கு உயர்த்திருப்பதன் மூலம் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை குறையக்கூடும் என பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

உலக அதிசயங்களுள் இடம்பெற்ற தாஜ்மஹாலை சுற்றி பார்க்க ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இது காதலர்களின் நினைவுச் சின்னமாக திகழ்ந்து வருகிறது. ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ளது. இக் கட்டடம் முகலாய மன்னரான ஷாஜகானால், இறந்து போன அவரது இளம் மனைவி மும்தாஜ் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது.

தினமும் 10 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் தாஜ்மஹாலை சுற்றி பார்க்க வருகின்றனர். இதை சுற்றிப்பார்க்க டிக்கெட் விலை 50 ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது 5 மடங்கு அதிகமாக்கி 250 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சாமானிய மக்களுக்கு மிகவும் சிரமம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

50 ரூபாய் கட்டணத்தில் தாஜ்மஹாலை வெளியே இருந்து மட்டுமே சுற்றி பார்க்க முடியும். ஆனால் உள்ளே சென்று பார்க்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டணம் ரூ.1,300 ஆக உள்ளது. சார்க் கூட்டமைப்பு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டுப் பயணிகளுக்கான கட்டணம் 540 ரூபாயிலிருந்து 740 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் 15-20 சதவிகிதம் பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, அதன் பாதுகாப்புக்கான வருவாயை அதிகரிக்க இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஏற்கனவே 40 ரூபாயாக இருந்த டிக்கெட் விலையை 50 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் இந்த திடீர் டிக்கெட் விலை உயர்வு சுற்றுலாப்பயணிகளுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *