வட தமிழ்நாட்டில் வரும் 15ஆம் தேதி கனமழை -இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

வட தமிழ்நாட்டில், வருகிற 15ஆம் தேதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளதாகவும் கூறியிருக்கிறது.

மத்திய தெற்கு வங்க கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

மேலும், அடுத்த 48 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடை உள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 72 மணி நேரத்தில், ஆந்திரா மற்றும் வட தமிழ்நாடு கரையை நோக்கி நகரக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதன் காரணமாக, தெற்கு மற்றும் தென்மேற்கு வங்க கடல், இந்திய பெருங்கடல் பகுதிக்கு, அடுத்த நான்கு நாட்களுக்கு மீனவர்கள் செல்ல கூடாது என்றும், ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற மீனவர்கள், புதன்கிழமை மாலைக்குள் கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், அடுத்த மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்றும், மழைக்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த 5 நாட்களுக்கு இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள வானிலை எச்சரிக்கையில், வருகிற 15ஆம் தேதி, தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என தெரிவித்திருக்கிறது.

மத்திய தெற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதிகளில், புதன்கிழமை முதல், 45 முதல் 60 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில், பலத்த காற்று வீசும் என்றும் இந்திய வானிலை மையம் கூறியிருக்கிறது. இந்த காற்றின் வேகம், வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில், மணிக்கு 75 கிலோ மீட்டர் வரையில் அதிகரிக்க கூடும் என்றும், தெரிவித்திருக்கிறது.

இதன்காரணமாக, செவ்வாய்க்கிழமை முதல், அடுத்த 4 நாட்களுக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்கள், மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என்றும் இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியிருக்கிறது.

வருகிற 15ஆம் தேதி வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில், கனமழை பெய்வதோடு, மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், வங்க கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *