உலகின் மிக உயரமான பட்டேல் சிலையை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

உலகிலேயே உயரமானதாக அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பிரதமர் மோடி, இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்க உள்ளார். இதற்கான வண்ணமயமான விழா ஆடல் பாடல் என்று காலையிலேயே களைகட்டியுள்ளது.

இந்தியாவின் இரும்பு மனிதர் என புகழப்படும் விடுதலைப் போராட்ட வீரர் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு, குஜராத்தில் நர்மதை ஆற்றின் நடுவே உள்ள தீவில் 597 அடி உயரத்தில் பிரமாண்டமாக சிலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு, சிலை அமைக்கும் பணிக்கு கடந்த 2013ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்தியாவின் ஆயிரக்கணக்கான கிராமங்களில் இருந்து, பொதுமக்களால் அனுப்பிவைக்கப்பட்ட இரும்பு துண்டுகளை பயன்படுத்தி, இரும்பு மனிதர் பட்டேலின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை, அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட இருமடங்கு அதிக உயரம் கொண்டது. சர்தார் வல்லபாய் பட்டேலின் 143வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அவரது சிலையை பிரதமர் மோடி இன்று பிற்பகலில் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

ஒற்றுமை சிலை என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சிலை இன்று திறக்கப்படுவதை முன்னிட்டு, நர்மதை ஆற்றங்கரையில் பிரமாண்ட மேடைகள் அமைக்கப்பட்டு, வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இசை நிகழ்ச்சியுடன், ஒடிசா, பஞ்சாப், குஜராத் மாநிலங்களின் பாரம்பரிய நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருவதை, பொதுமக்கள் உற்சாகமாக ரசித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *