3வது ஒரு நாள் போட்டி: இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!!

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம், ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 20 ஓவர் தொடரைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்றிருந்தன. இதையடுத்து, மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி, லீட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 2 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த ஷிகர் தவானும் கேப்டன் விராட் கோலியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் தவான் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி 71 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த தோனி 42 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ரஷீத், வில்லே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதில் 257 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் வின்ஸ் 27 ரன்களிலும், பெய்ர்ஸ்டோவ் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ரூட்-டும், கேப்டன் மோர்கனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன்மூலம், 44.3 ஓவர்களில் இலக்கை எட்டிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கடைசிவரை ஆட்டமிழக்காத ரூட் 100 ரன்களையும், மோர்கன் 88 ரன்களையும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம், ஒரு நாள் தொடரை 2-க்கு ஒன்று என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருதை அதில் ரஷீத்-தும், தொடர் நாயகன் விருதை ஜோ ரூட்-டும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர், வரும் 1ஆம் தேதி தொடங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *