2022ம் ஆண்டுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் வீடு வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும்… குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உறுதி;

2022ம் ஆண்டுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் வீடு வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், விவசாயிகளின் வருவாயை இரு மடங்காக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். 2022ம் ஆண்டுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் வீடு வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும் என்று குடியரசுத் தலைவர் கூறினார். மேலும் மாநிலங்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான பொருளாதார சீர்திருத்தங்களால், வரும் நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7 முதல் 7.5 சதவீதம் வரை உயரும் என பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், உலகின் மிகவேகமாக வளரும் பொருளாதாரம் என்ற பெயரை இந்தியா மீண்டும்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி பதிவு தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிர, உத்தரப்பிரதேச மாநிலங்களில்தான் பெரும் எண்ணிக்கையில் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி மூலம் மறைமுக வரிசெலுத்துவோரின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை சேமிக்கும் பழக்கத்திற்கு ஊக்கமளித்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில், ஜெர்மனி, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, உலகின் சிறந்த ஏற்றுமதி நிறுவனங்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்த அளவில் இருப்பதாகவே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாடாளுமன்ற இரு அவைகளும் பிப்ரவரி 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 1 ஆம்தேதி 2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் இரண்டு அமர்வுகளாக நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *