2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் அனைவரும் விடுதலை; தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து…

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை என்று நேற்று தீர்ப்பு வெளியானது. இந்த தீர்ப்புக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஓ.பி.ஷைனி, 2 ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து உத்தரவு பிறப்பித்தார். இந்த தீர்ப்புக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முந்தைய காங்கிரஸ் அரசின் மீதான பொய்யான பரப்புரை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.

2ஜி அலைகற்றை வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில், ‘அநீதி வீழும், அறம் வெல்லும்’ என திமுக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். அவரது கைப்பட எழுதிய இந்த வசனம் திமுகவினரால் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.

இதையடுத்து, 2ஜி வழக்கின் தீர்ப்புக்கு பின் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும், திமுகவை அவமானப்படுத்தி, அழிக்க வேண்டும் என்று போடப்பட்ட பொய்யான வழக்கு இது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2ஜி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம், இது திமுகவின் மீது தொடுக்கப்பட்ட பொய் வழக்கு என்பது நிரூபணம் ஆகி உள்ளது என்றும், இந்த வழக்கில் உண்மையில்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

2ஜி வழக்கில் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை மனமகிழ்ச்சியுடன் வரவேற்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும் 6 ஆண்டாக நடந்து வந்த வழக்கில் திமுக மீதான கரையை நீதிமன்றம் நீக்கியுள்ளது என்று வைகோ கூறியுள்ளார்.

பொய்யாக புனையப்பட்ட 2ஜி வழக்கில் நியாயம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று திமுகவின் முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

2ஜி வழக்கின் தீர்ப்பினை வரவேற்பதாகவும், தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் உயர்மட்ட அளவில் ஊழல் நடைபெற்றதாக முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களும் பொய் என்பதை இந்த தீர்ப்பு உணர்த்தியுள்ளது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

2ஜி வழக்கில் அனைவரும் விடுதலையானது மகிழ்ச்சி என்றும், எதிர்கட்சி என்பதால் சிறைக்கு செல்ல வேணடும் என்று நினைக்கவில்லை என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

2ஜி வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு ஏற்புடையது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதேபோல், தீர்ப்பினை வரவேற்று தமிழகம் முழுவதும் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *