வேலூரில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவிகள் 4பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதியுதவி; மாணவிகளின் தற்கொலை குறித்து உரிய விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு

வேலூர் பனப்பாக்கத்தில் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவிகள் 4பேரின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த பனப்பாக்கம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 4 மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்து 4 மாணவிகளும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பனப்பாக்கத்தில் தீபா, சங்கரி, ரேவதி, மனிஷா ஆகிய நான்கு பள்ளி மாணவிகள் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார். மேலும் உயிரிழந்த நான்கு மாணவிகளின் குடும்பங்களுக்கு பொது நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். மாணவிகளின் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும், மாணவிகள் உயிரிழந்தது குறித்து உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு ஆணையிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *