வீரமரணமடைந்த காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்; சொந்த ஊரான மூவிருந்தாளியில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி ….

ராஜஸ்தானில் வீரமரணம் அடைந்த காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரான மூவிருந்தாளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நகைக்கடை கொள்ளையர்களை பிடிப்பதற்காக ராஜஸ்தான் சென்ற சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் பெரியபாண்டியன், கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தார். இதையடுத்து ராஜஸ்தானில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்ட பெரிய பாண்டியன் உடலுக்கு விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்ட பெரிய பாண்டியனின் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் ஆட்சியர் வீரராகவராவ் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அங்கிருந்து பெரியபாண்டியனின் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த மூவிருந்தாளி கிராமத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. அங்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மேலும் ஊர்மக்கள் திரண்டு வந்து கண்ணீர் மல்க பெரிய பாண்டியனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து பெரியபாண்டியனின் உடல் அவரது வீட்டில் இருந்து காவல்துறை அணிவகுப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அவரது தோட்டத்தில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *