மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் விதமாக கடலூரில் இன்று ஆய்வு மேற்கொள்ளும் ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டப்படும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு…..

மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் விதமாக கடலூரில் இன்று ஆய்வு மேற்கொள்ளும் தமிழக ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டப்படும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் விதமாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை அவமதிக்கும் விதமாகவும் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி வரும் ஆளுநரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று கடலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், ஆளுநரின் ஆய்வுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக கடலூருக்கு வரும் ஆளுநருக்கு அமைதியான முறையில் கருப்புக் கொடி காட்டப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசும், தமிழக மக்களும் வலியுறுத்தியும் கூட இதுவரை மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள அவர், தமிழக மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் விதமாக ஆளுநர் நடந்து கொள்வது ஏற்புடையதல்ல என்று கூறியுள்ளார். இதுவரை இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு தமிழக ஆளுநர் நடந்துகொள்வது இந்திய ஜனநாயகத்தையே கேலி செய்யும் விதமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், தமிழக ஆளுநர் தனது அதிகார வரம்பை உணர்ந்து அதன்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் வரம்புமீறி செயல்படும் ஆளுநரின் போக்கை அனைத்து கட்சிகளும் கண்டிக்க முன் வரவேண்டும் எனவும் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார். இதேபோல் ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து கடலூரில் திமுக சார்பில் கருப்பு கொடி காட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி வரும் ஆளுநரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது

* கடலூரில் ஆளுநரின் ஆய்வுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக அமைதியான முறையில் கருப்புக் கொடி காட்டப்படும்

* ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியும் இதுவரை மத்திய அரசு செவிசாய்க்கவில்லை

* தமிழக மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் விதமாக ஆளுநர் நடந்து கொள்வது ஏற்புடையதல்ல

* தமிழக ஆளுநரின் நடவடிக்கை இந்திய ஜனநாயகத்தையே கேலி செய்யும் விதமாக இருக்கிறது

* தமிழக ஆளுநர் தமது அதிகார வரம்பை உணர்ந்து அதன்படி நடந்து கொள்ள வேண்டும்

* வரம்புமீறி செயல்படும் ஆளுநரின் போக்கை அனைத்து கட்சிகளும் கண்டிக்க முன் வரவேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *