வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் குடும்பத்தினர் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை ; முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தகவல்….

சசிகலா உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்கள் என 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆயிரத்து 900 பேர் சோதனை நடத்தி வரும் நிலையில், 215 சொத்துகளும், 355 நபர்களும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

ஆப்பரேசன் கிளீன்மணி என்ற பெயரில் நடைபெறும் இந்த வருமான வரித்துறை சோதனைக்கு “ஸ்ரீனி வெட்ஸ் மகி” என்ற குறியீட்டுப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. சோதனைக்காக அதிகாரிகள் சென்ற கார்களில், திருணத்திற்கு செல்லும் கார்களில் ஒட்டுவதைப் போல “ஸ்ரீனி வெட்ஸ் மகி” என ஒட்டப்பட்டிருந்தது. ரெய்டு நடத்தப்போவது முன்கூட்டியே வெளியே கசிந்துவிடக் கூடாது என்பதற்காக மிக கவனமாக திட்டமிடப்பட்ட இந்த சோதனைக்கு, மழை ஓய்ந்து வானிலையும் சாதகமாக அமைந்துவிட்டது. காலை 5.30 மணிக்கு 67 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை தொடங்கியது. பின்னர் இந்த சோதனை 187 இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.வருமான வரித்துறையை சேர்ந்த 6 ஆணையர்கள் உட்பட ஆயிரத்து 900 பேர் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் மொத்தம் 190 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீடு, தியாகராய நகரில் உள்ள இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா வீடு, நுங்கம்பாக்கத்தில் உள்ள இளவரசி மகன் விவேக் வீடு, பெசன்ட் நகரில் உள்ள நடராஜன் வீடு உள்பட பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. மன்னார் குடியில் உள்ள தினகரனின் வீடு, தஞ்சையில் தினகரனின் மாமனார் சுந்தரவதனத்தின் வீடு, மன்னார்குடியில் திவாகரன் வீடு, தஞ்சையில் மகாதேவன் வீடு, மருத்துவர் வெங்கடேஷ் வீடு, கூடலூரில் சசிகலாவின் ஆதரவாளரான மர வியாபாரி ஒருவரின் வீடு, கொடநாடு எஸ்டேட், கர்சன் எஸ்டேட், கோவை, அவினாசியில் சசிகலா ஆதரவாளர்கள் வீடு, சேலத்தில் சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில் வீடு, பெங்களூரில் சசிகலாவின் தீவிர ஆதரவாளர் புகழேந்தி வீடு, தஞ்சை அருளானந்தம் நகரில் சசிகலா கணவர் நடராஜன் வீடு, திருச்சியில் இளவரசியின் சம்பந்தி கலியபெருமாள் வீடு உள்பட பல இடங்களில் சோதனை நடைபெற்றது. ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றனின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. ஜெயலலிதாவின் தனி மருத்துவர் சிவக்குமாருக்குச் சொந்தமான திருச்சி ராஜா காலணியில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து வருமானத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே நாளில் 190 இடங்களில் வருமானவரி சோதனை நடப்பது நாட்டில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சோதனை குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், வி.கே.சசிகலாவும், தானும் அரசியலில் இருக்கக்கூடாது என்பதற்காக சதி நடப்பதாகவும், இந்த சோதனைகளுக்கு எல்லாம் பயப்படப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *