ராஜஸ்தானில் வீரமரணம் அடைந்த காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் இன்று தமிழகம் வருகை; சொந்த ஊரான சங்கரன் கோவில் அடுத்த சாலைப்புதூரில் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகள் தீவிரம்….

ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் தனி விமானம் மூலம் இன்று தமிழகம் கொண்டு வரப்படுகிறது.

நகைக்கடை கொள்ளையர்களை பிடிப்பதற்காக ராஜஸ்தான் சென்ற சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் பெரியபாண்டி, கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தார். இதனையடுத்து சுட்டுக்கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் வீட்டுக்குச் சென்று மு.க.ஸ்டாலின், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆறுதல் தெரிவித்துள்ளனர். மேலும் பெரியபாண்டியன் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தானில் பெரியபாண்டியன் உடல் பிரேதப்பரிசோதனை முடிந்து காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பெரியபாண்டியன் உடல் அங்கிருந்து தனி விமானம் மூலம் பெங்களுர் வழியாக சென்னை கொண்டு வரப்பட்டு பின்னர் மதுரை கொண்டு செல்லப்பபடுகிறது. மதுரையில் இருந்து சொந்த ஊரான சங்கரன்கோவில் அருகே சாலைப்புதூருக்கு கொண்டு செல்லப்பட்டு இன்றே இறுதிச் சடங்கு நடைபெறும் என கூறப்படுகிறது. மேலும் ராஜஸ்தானில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து ஜெய்தரன் காவல்துறையினர் ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *