முல்லைப் பெரியாறில் புதிய அணையா ? ஆய்வு நடத்த கேரளாவுக்கு அனுமதி..!

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக் கூறு ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

123 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசுக்கும், தமிழகத்திற்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்த அணை உடைந்துவிட்டால் கேரள அரசு மிகப் பெரிய அழிவை சந்திக்கும் என்று கேரள அரசு தொடர்ச்சியாக கூறி வருகிறது. இதனிடையே சமீபத்தில் கேரள அரசு வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ளத்தின் பல பகுதிகளில் நீரில் மூழ்கின. இதனை காரணம் காட்டி முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக வேறு அணை கட்ட அனுமதி வழங்க வேண்டும் என மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தை கேரள அரசு நாடியது.

இந்நிலையில் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் 7 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. இதில் ஒன்றாக தமிழக அரசின் ஒப்புதலை பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரணம் முல்லைப் பெரியாறு அணை தமிழகத்தோடும் தொடர்புடையது என்பதால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் 7-ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறும் வகையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முடிவு இருப்பதாக தமிழக அரசின் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது கடந்த 2015-ஆம் ஆண்டு இந்த பிரச்னை எழுந்தது. அப்போது முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு ஜெயலலிதா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியிடம் புதிய அணை கட்ட ஆய்வு நடத்த அனுமதி வழங்கக் கூடாது என அவர் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *