மும்பை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது.

நவராத்திரி விடுமுறை தினம் என்பதால், எல்ஃபின்ஸ்டன் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது, மின்சாரம் தாக்கி மூன்று பேர் உயிரிழந்ததாக வதந்தி ஏற்பட்டது. இதனால், பதறியடித்துக் கொண்டு நடை மேம்பாலத்தில் ஏராளமானோர் சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது. காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் ரயில் நிலைய நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தோர் விரைவில் நலம்பெற பிரார்த்தனை செய்வதாகவும், அமைச்சர் பியூஸ் கோயல் மும்பையில் தங்கி அனைத்து பணிகளையும் மேற்கொள்வார் எனவும் பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியுள்ளார். மும்பை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பங்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தோரும் விரைவில் நலம் பெற வேண்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *