முன்னாள் முதலமைச்சர் அமரர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது; அவரது நினைவிடத்தில் அதிமுக தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை

தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்தவரும், பெண்களுக்கு பெருமை சேர்த்தவருமான முன்னாள் முதலமைச்சர் அமரர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் குறித்த செய்தி தொகுப்பை இப்போது காண்போம்….

இந்த குரல் இன்றும் உலக தமிழர்களின் உள்ளங்களில் ஒலித்து கொண்டுதான் இருக்கின்றது. தமிழகத்தின் அரசியல் சக்தியாக திகழ்ந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் நாள் இயற்கை எய்தினார். 70 நாட்களுக்கு மேல் சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் மரணமடைந்தார். அவரது உயிரிழப்பு இந்திய துணைக் கண்ட அரசியலிலே ஒரு பேரிழப்பாக கருதப்படுகிறது. அவரது வெற்றிடம் இன்றும் நிரப்ப படவில்லை என்பது நிதர்சனம். 1982ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி எம்.ஜி.ஆர். துவங்கிய அகில இந்திய அண்ணா தி.மு.க.வின் கடலூர் மாநாட்டில் ஜெயலலிதா தம்மை இணைத்து கொண்டார். கொள்கை பரப்பு செயலாளராக அதிமுகவில் பிரவேசம் செய்த ஜெயலலிதா முதலமைச்சர் ஆசனத்தில் 3முறை அமர்ந்து தமிழக மக்களுக்கு சேவை புரிந்துள்ளார். அவரது ஆட்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டது. இப்படி எண்ணற்ற திட்டங்களின் மூலம் தமிழக அரசியலில் அசைக்க முடியாத இடத்தை பிடித்த ஜெயலலிதா, தமது மறைவினால் எதிர்க்கட்சி தலைவர்களின் உள்ளங்களிலும் சோகத்தை ஏற்படுத்தினார். அவரது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதிமுகவின் இரு பிரிவினரும் ஜெயலலிதாவின் நினைவு நாளை அனுசரிப்பதற்காக தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் அறிவிப்பு பதாகைகளை அமைத்துள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலைஅண்ணா சிலையில் இருந்து ஜெயலலிதா சமாதி வரை அமைதி ஊர்வலம் நடைபெறுகிறது. இதேப்போன்று டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் காலை 11 மணி அளவில் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அம்மா என்று அன்புடன் அழைக்கப்படும் ஜெயலலிதா மரணமடைந்து ஒராண்டுகள் ஆகிறது. ஆனாலும் அவரது நினைவலைகள் தமிழர்களின் மனதில் இன்றும் ஓயவில்லை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *