ஆர்.கே.நகர் தொகுதியில் நிறைவடைந்தது வேட்புமனு தாக்கல்; நடிகர் விஷால், ஜெ.தீபா, பாஜக வேட்பாளர் உட்பட மொத்தம் 131 பேர் வேட்புமனு தாக்கல்…

ஆர்.கே.நகர் இடைதேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தை அடுத்து இந்த தேர்தலில் போட்டியிட 131 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்ததது. மொத்தம் 131 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

நடிகர் விஷால் தி.நகரில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்திலும், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த விஷால் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மலர் மாலை வைத்து மரியாதை செய்தார். பின்னர் இருசக்கர வாகனத்தில் ஆர்.கே.நகர் சென்ற அவர் வரிசையில் காத்திருந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சேரன், விஷால் தயாரிப்பாளர்கள் நலன் பற்றி கருதாமல் தன்னுடைய சுய முன்னேற்றத்திற்காக மட்டுமே பாடுபடுவதாக குற்றம் சாட்டினார். மேலும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷால் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் கரு.நாகராஜன் மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தலைமையில் சென்று தமது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், நடிகர் விஷால் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

இதையடுத்து அதிமுக எம்ஜிஆர் ஜெயலலிதா தீபா பேரவையின் நிறுவனத் தலைவர் தீபாவும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

முன்னதாக, வேட்புமனு தாக்கல் செய்ய வந்த விஷாலையும், கரு.நாகராஜனையும் வரிசை அடிப்படையில் அனுமதிக்க வேண்டும் என்று சுயேட்சை வேட்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது பகுஜன் சமாஜ் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *