மானியமாக வழங்கப்படும் யூரியாவுடன் வேப்ப எண்ணெய் கலக்கப்படும் ; பிரதமர் நரேந்தி மோடி தகவல்….

விவசாயத்துக்கான மானிய யூரியாவுடன் வேப்ப எண்ணெய் கலக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக பிரதமர் நரேந்தி மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமராக பதவியேற்ற பின்னர் முதன் முறையாக தனது சொந்த ஊரான குஜராத்தில் உள்ள வாத் நகருக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் கோஷமிட்டபடி அவரை உற்சாகமாக வரவேற்றனர்.
வாத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 500 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை, ரயில் நிலையத்திற்கான புதிய கட்டடம் ஆகியவற்றை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரசின் 10 வருட ஆட்சி காலத்தில் சுகாதார திட்டங்கள் முடக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டினார். நாட்டின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் அரசு எதையும் செய்யவில்லை என்று கூறிய பிரதமர் மோடி, பாஜக ஆட்சியில் ஏழை மக்களுக்கு குறைந்த செலவில் சுகாதார சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, பாரூச் நகரில் நர்மதா ஆற்றின் குறுக்கே அமையும் பாலத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, பீகார், உத்தரபிரதேசத்தை இணைக்கும் புதிய விரைவு ரயில் சேவையை கொடியசைத்து தொடக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், புதிய ரயில் சேவை என்பது ரயில்வே அமைச்சகத்தின் பாராட்டத்தக்க முன்முயற்சி என்று தெரிவித்தார். இருமாநில மக்களை தொடர்புபடுத்துவதாக கூறிய பிரதமர் மோடி, இருமாநில மக்களும் பண்டிகை காலங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இந்த ரயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். மேலும், விவசாயத்துக்கான மானிய யூரியாவுடன் வேப்ப எண்ணெய் கலக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது என்று தெரிவித்த பிரதமர் மோடி, யூரியாவுடன் வேப்ப எண்ணெய் கலப்பதால் விவசாயத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *