மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம்

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் தொடங்குகிறது.

மக்களவையில் நடைபெறும் விவாதத்தின் முடிவில் பிரதமர் மோடி பதிலளிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்துள்ள இந்த தீர்மானம், மோடி தலைமையிலான அரசு எதிர்கொள்ளும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானமாகும். பெரும்பான்மைக்கு தேவையானதை விட அதிக ஆதரவு இருப்பதால் இத்தீர்மானத்தை அரசு எளிதில் தோல்வியடைய வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் 314 எம்பிகளுடன் வேறு சில எதிர்க்கட்சிகளும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க வாய்ப்புள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நரசிம்ம ராவ் தெரிவித்துள்ளார். இந்த தீர்மானத்தை கட்சிகளின் பலத்தை நிரூபிக்கும் போட்டியாக பார்க்கவில்லை என்றும் ஆளும் கட்சியின் தோல்விகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் களமாக இதை பயன்படுத்திக்கொள்ள உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

தீர்மானத்தின் மீது அதிக நேரம் பேசும் வாய்ப்பு பெற்றுள்ள ஆளும் பாரதிய ஜனதா கட்சி, தங்கள் ஆட்சியின் சாதனைகளையும் எதிர்க்கட்சிகளை சாடும் வகையிலான வாதங்களையும் முன் வைக்க திட்டமிட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *