சுங்கச் சாவடிகளை அகற்றக் கோரி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் – தமிழகத்தில் நான்கரை லட்சம் லாரிகள் ஓடவில்லை என தகவல்

சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடுமுழுவதும் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கி உள்ளனர்.

சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு, ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வந்து, அவற்றின் விலையை குறைக்க வேண்டும், மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை துவங்கியுள்ளனர்.

நாடு முழுவதும் 90 லட்சம் லாரிகள், மினிலாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் நான்கரை லட்சம் கனரக வாகனங்களும், ஒன்றரை லட்சம் மினி வேன்களும் இயங்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த வேலைநிறுத்தத்தில் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களும் பங்கு பெறுவதாக அறிவித்துள்ளனர்.

தூத்துக்குடியில் 4 ஆயிரம் லாரிகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. உள்ளூரில் இயங்கும் 2 ஆயிரம் லாரிகளும், வெளியூர்களில் இருந்து வரும் 2 ஆயிரம் லாரிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதிப் பணிகள் முடங்கி உள்ளன. மேலும் தொழிற்சாலைகளுக்கு பொருள்கள் ஏற்றிச்செல்வது, உப்பு வர்த்தகம் உள்ளிட்டவையும் பாதிக்கப்பட்டுள்ளன.

கரூரில் 2 ஆயிரத்து 600 லாரிகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. 2 ஆயிரம் சரக்கு லாரிகளும், மணல் – ஜல்லி ஏற்றிச் செல்லும் லாரிகள் மற்றும் 600 மினிலாரிகள் ஆகியவை இயக்கப்படவில்லை. இதன் காரணமாக கரூர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 10 கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *