மதுக்கடைகளை திறக்கும் விவகாரத்தில், பொறுப்பற்ற தன்மையுடன் செயல்பட்டிருக்கிறது தமிழக அரசு; உச்சநீதிமன்றத்தில் தவறான தகவலை கூறியிருப்பதாக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்…..

மதுக்கடைகளை திறக்கும் விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தில், தவறான தகவல்களை தெரிவித்து, பொறுப்பற்ற தன்மையுடன் செயல்பட்டிருப்பதாக, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மதுக்கடைகளை திறக்கும் விவகாரத்தில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து, மதுக்கடையை திறந்து கொள்ள மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழகத்தில் ஆயிரத்து 700 மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதனை எதிர்த்து தொடர்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, தமிழக அரசு சாலைகளை வகை மாற்றம் செய்யக்கூடாது என உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த வாரத்தில் விசாரணைக்கு வந்தபோது, சாலை மாற்றம் செய்வது பற்றி உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் பெற்று வருவதாக, தமிழக அரசு கூறியது. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் சார்பில் சில விளக்கங்கள் பெறப்பட்டன. இந்நிலையில், நேற்று பிற்பகலில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, தமிழக அரசு வழக்கறிஞரை திடீரென அழைத்து சாலைகளை வகைமாற்றம் செய்து மதுக்கடைகளை திறப்பது பற்றி உயர்நீதிமன்றம் தான் விளக்கம் பெற்று வருமாறு கூறியது, என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது ஏன் என கேள்வி எழுப்பினர். உச்சநீதிமன்ற தீர்ப்பு நாடு முழுவதும் பொருந்தும் என்பது தங்களுக்கு தெரியாதா? என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிகழ்வு, தமிழக அரசின் பொறுப்பற்ற தன்மையை காட்டுவதாக உள்ளது என்று, அரசுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *