பேருந்து கட்டண குறைப்பு கண் துடைப்பு நாடகம் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு… திட்டமிட்டபடி இன்று மறியல் போராட்டம் நடைபெறும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு;

பேருந்து கட்டண உயர்வை முழுவதுமாக திரும்பப்பெற வலியுறுத்தி இன்று திட்டமிட்டபடி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திமுக , காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பேருந்து கட்டண குறைப்பு வெறும் கண்துடைப்பு என அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சிகள், மக்கள், மாணவர்கள் போராடியதால் பெயரளவிற்கு பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். உயர்த்தப்பட்ட கட்டணத்தை முழுவதும் திரும்பப்பெறும் வரை போராட்டங்கள் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், எதிர்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று பேருந்து கட்டணத்தை குறைக்கப்பட்டிருப்பது போதுமானதாக இல்லை என்றும், பேருந்து கட்டணத்தை முற்றிலும் வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதேபோல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பேருந்து கட்டணம் குறைவு குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பேருந்து கட்டண குறைவு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிறிதளவு மட்டுமே பேருந்து கட்டணத்தை குறைத்திருப்பது மக்களை ஏமாற்றும் செயல் என்று கூறியுள்ளார்.

தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த, ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் பேருந்து கட்டணத்தை சொற்ப அளவில் குறைத்திருப்பது வெறும் கண்துடைப்பு நாடகம் என்று குற்றம் சாட்டினார்.

பேருந்து கட்டணம் குறைப்பு திமுக நடத்திய போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் மக்கள் மீது ஏற்றி வைக்கப்பட்ட சுமை முழுமையாக இறக்கி வைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *