பூந்தமல்லியில் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரை ஓட ஓட விரட்டி வெட்டிய 3 பேர் கைது

சென்னையை அடுத்த பூந்தமல்லி காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் அன்பழகன்(45). இவர் நேற்றிரவு பைக்கில் ரோந்துப்பணிக்கு சென்றுள்ளார். உடன் ஹோம் கார்டு எனப்படும் போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த ஒருவரும் சென்றுள்ளார். இருவரும் ஒரே பைக்கில் காட்டுப்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சுமார் 1 மணி அளவில் காட்டுப்பாக்கம் அட்கோ நகர் பகுதியில் உள்ள ஒரு சந்தின் வழியாக சென்ற போது, அங்கே பைக்கில் வந்த 3 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவலர் அன்பழகன் 3 பேரையும் அழைத்து விசாரித்துள்ளார். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர். இதையடுத்து காவலர் தன்னுடை செல்போனில் 3 பேரையும் போட்டோ எடுத்துள்ளார். போலீசாருக்கு செல்போனில் ஃபேஸ் டிராக் என்ற ஆப் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்- மூலம் போட்டோ எடுத்தால், போட்டோவில் இருப்பவர் பழைய குற்றவாளியா என்று தெரிந்து விடும். அதன் மூலம் குற்றவாளிகளை எளிதில் பிடிக்க காவல்துறையில் இப்படி ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவலர் அன்பழகனும் இந்த ஆப் மூலம் 2 பேரை போட்டோ எடுத்து விட்டு 3-வது நபரை எடுக்க முயன்ற போது செல்போனை தட்டிவிட்டு காவலருடன் சண்டையிட்டுள்ளார். பின்னர் அந்த நபர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காவலர் அன்பழகனை ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளார். இதில் அவருக்கு கால் மற்றும் கைகளில் பலத்த வெட்டுக்காயம் விழுந்தது. அலறியபடி அவர் மயங்கி விழுந்தார். காவலருடன் சென்ற நபரையும் அவர்கள் விரட்டியுள்ளனர். அவர்  அங்கிருந்து தப்பியோடி பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தின் போது தவறி கீழே விழுந்த காவலரின் செல்போனை எடுத்துக் கொண்டு, காவலரை வெட்டிய 3 பேரும் பைக்கில் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த.போலீசார், காவலர் அன்பழகனை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
      இதற்கிடையே சென்னை காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டு தப்பியோடியவர்களை பிடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். 3 பேரும் திருவேற்காடு அருகே பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பூந்தமல்லி போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் 3 பேரும் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட்டனர். விசாரணையில் பன்னீர்செல்வம், திருவேற்காட்டை சேர்ந்த ரஞ்சித், மதுரவாயலைச் சேர்ந்த விஜயகுமார் என்பது தெரிய வந்தது. ரவுடிகளான இவர்களில் பன்னீர் செல்வம் மற்றும் விஜயகுமார் மீது கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் நள்ளிரவில் அங்கு ஏன் வந்தனர். கொள்ளை அல்லது வழிப்பறியில் ஈடுபட திட்டமிட்டிருந்தார்களா, இவர்கள் மீது வேறு ஏதேனும் வழக்குகள் உள்ளனவா என்று பூந்தமல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் போலீசாரை ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *