பிற மாநிலங்களில் கரை சேர்ந்துள்ள மீனவர்கள் தமிழகம் திரும்புவதற்கு நடவடிக்கை; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை….

அண்டை மாநிலங்களில் கரை சேர்ந்த மீனவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களை கண்டறிந்து மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து, கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படை அதிகாரிகளுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில், ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்ற மீனவர்களில் சிலர், கரை திரும்பவில்லை என்பது, மாவட்ட நிர்வாக கணக்கெடுப்பில் தெரியவந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது என்றும் புயல் போன்ற அசாதாரண காலங்களில், கடலோர காவல்படை, கடற்படை ஆகியவை வான் வழி கண்காணிப்பு மேற்கொண்டு கரை திரும்ப எச்சரிக்கை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் கோரிக்கையான, ஹெலிகாப்டர் இறங்குதள வசதியுடன் கூடிய பிரத்யேக கடலோர காவல் படை நிலையம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மகாராஷ்டிரா, குஜராத், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கரை சேர்ந்த மீனவர்களை அவர்களது படகுகளுடன் சொந்த ஊர்களுக்கு கொண்டு வந்து சேர்க்க,மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அனுப்ப முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அண்டை மாநிலங்களில் கரை சேர்ந்துள்ள மீனவர்கள் பத்திரமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு ஏதுவாக, விசைப்படகு ஒன்றுக்கு 750 லிட்டர் டீசல் எண்ணெயும், நாட்டுப்படகு ஒன்றுக்கு 200 லிட்டர் எரி எண்ணெயும் வழங்கிட முதலமைச்சர் பழனிசாமி ஆணையிட்டுள்ளார். மேலும் அண்டை மாநிலங்களில் கரை சேர்ந்த மீனவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *