பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு திரும்பிய பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை எண்ணி, சரிபார்க்கும் பணி இன்னும் நடைபெற்று வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு, நவம்பர் 8ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவுபெற உள்ளது. நவம்பர் 8ஆம் தேதியை கறுப்பு நாளாக கடைப்பிடிக்கப் போவதாக எதிர்க்கட்சிகளும், கறுப்பு பண எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப் போவதாக பாஜகவும் அறிவித்துள்ளன.

இந்நிலையில், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பழைய நோட்டுகளை சரிபார்த்தல் மற்றும் எண்ணும் பணி தொடர்பாக ரிசர்வ் வங்கியிடம் விளக்கம் கேட்டுப் பெறப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 30ஆம் தேதி வரை, ஆயிரத்து 134 கோடி எண்ணிக்கையிலான 500 ரூபாய் நோட்டுகளையும், 524.90 கோடி எண்ணிக்கையிலான 1000 ரூபாய் நோட்டுகளையும் ரிசர்வ் வங்கி எண்ணி, சரிபார்த்துள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு 10.91 லட்சம் கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு சரிபார்ப்புக்கு சிவிபிஎஸ் எனப்படும் உயர்தர எந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாகவும், நாள் ஒன்றுக்கு 2 ஷிஃப்ட்டுகள் பணியாற்றி பழைய ரூபாய் நோட்டுகள் எண்ணப்பட்டு வருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த பணி எப்போது முடியும் என்ற கேள்விக்கு, எண்ணி, சரிபார்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டறிக்கையில், பழைய 500 ரூபாய் நோட்டுகளில் 99 சதவீதம் அதாவது 15.28 லட்சம் கோடி அளவுக்கு வங்கி முறைக்கு திரும்பி விட்டதாக தெரிவித்திருந்தது. இது, எண்ணி-சரிபார்க்கும் பணி முழுமையாக நிறைவடைந்த பிறகு, திருத்தத்திற்குட்பட்டது எனவும் ரிசர்வ் வங்கி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *