தொடர் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை ; தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை மேலும் வலுவடைந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்….

கனமழை எச்சரிக்கையை அடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 30-ம் தேதி முதல் வெளுத்து வாங்கிய கனமழையால், பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதுடன், பெரும்பாலான சாலைகள் குளம்போல் காட்சியளிக்கின்றன. இந்நிலையில், மழை விட்டு விட்டு மழை பெய்து வருவதால், சென்னையின் புறநகர் பகுதிகள் மீண்டும் வெள்ளக் காடாக மாறியுள்ளன. பள்ளிக்கரணையில் உள்ள நாராயணபுரம் ஏரி உடைந்து தண்ணீர் வெளியேறியதால், 500க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேற்கு தாம்பரம், முடிச்சூர் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 10 ஆயிரம் வீடுகளை தண்ணீர் சூழ்ந்திருப்பதால், அவற்றில் வசிக்கும் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

தொடர் மழை காரணமாக, சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. புழல் ஏரியில் 127 மில்லியன் கன அடியும், சோழவரம் ஏரியில் 60 மில்லியன் கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் அதிகபட்சமாக 165 மில்லியன் கனஅடியும் நீர் உயர்ந்துள்ளது. பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் 32 மில்லியன் கனஅடியும் உயர்ந்துள்ளது. 4 நீர்த்தேக்கங்களிலும் ஆயிரத்து 371 மில்லியன் கன அடியாக இருந்த தண்ணீர் இருப்பு, தற்போது ஆயிரத்து 743 மில்லியன் கனஅடியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நேற்று மழை தொடர்ந்து பெய்ததால், வானிலை எச்சரிக்கையைப் பொறுத்து, இன்று 3-வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை மாவட்டங்களின் ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் திட்டமிட்டபடி இன்று நடைபெறும் என தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *