தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது; கோவையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கவும், மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கன்னியாகுமரி மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். இரண்டு அமைச்சர்களுடன், 4 ஐஏஎஸ் அதிகாரிகளும் இதற்காக அங்கு முகாமிட்டு, நிவாரணப்பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

குமரி மாவட்டத்தில் புயல் பாதிப்புக்கான கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருவதாகவும், எப்போது தொடர்பு கொண்டாலும் உரிய உதவிகளை அளிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். புயலின் போது கடலுக்கு சென்று கரைக்குத் திரும்பாத மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

கோவையில் இளைஞர் ரகுபதி மரணமடைந்த விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்தை எதிர்க்கட்சியினர் அரசியலாக்குவதாக விமர்சித்தார். சிசிடிவி காட்சிகள் தெளிவாக இருப்பதால், நீதிமன்றத்தில் அது சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே ஓகி புயல் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி கேட்டறிந்தார். மேலும் தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தாம் தயார் என முதல்வரிடம் பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *