ஜெயலலிதா மரணம் தொடர்பாக, அனைத்து அமைச்சர்களை விசாரிக்க வேண்டும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, அனைத்து அமைச்சர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில், பேனர்களை அகற்றிய விவகாரத்தில் படுகாயம் அடைந்த கட்சி நிர்வாகி பேரறிவாளன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நேரில் சந்தித்து, நலம் விசாரித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், ஒரு கட்சிக்கு சாதகமாகவும், ஒரு கட்சிக்கு எதிராகவும் காவல்துறையினர் செயல்படுவது நியாயம் இல்லை என தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, அனைத்து அமைச்சர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் வலியுறுத்தினார்.

ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ், விசைப்படகுகளை அனுமதிக்க வேண்டும் என்றும் சட்டத்தை மீறி செயல்படுவதன் காரணமாக பாரம்பரியமிக்க மீனவர்கள் பாதிக்கப்படுவதோடு, கடலில் மீன் வளம் பாதிக்கப்படுகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.

முன்னதாக, காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கம் அடுத்த நத்தம் நல்லூர் காலனியில், கடந்த மாதம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடும்போது, இருப்பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், 3 வீடுகள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக, அப்பகுதியை சேர்ந்த சிலரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், நல்லூர் காலனி பகுதிக்கு சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அரசு ஊழியர் ஐக்கிய பேரவை சார்பில், 93 குடும்பங்களுக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில், ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை பற்றி பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, சிங்களர்கள் சிலர் சூழ்ந்துகொண்டு தாக்க முயன்றதற்கு கண்டனம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *