திமுக தலைவர் கருணாநிதி உடல்நலத்துடன் இருப்பதாக கட்சி நிர்வாகிகள் அறிவிப்பு ; தேவையில்லாமல் வதந்தி பரப்ப வேண்டாம் என மு.க. ஸ்டாலின் கோரிக்கை

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலத்துடன் இருப்பதாகவும், தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் அனைத்து காவல் சிறப்பு படைகளும் தயார் நிலையில் இருக்குமாறும், விடுப்பில் சென்றுள்ள காவலர்கள் உடனடியாக முகாம்களுக்கு திரும்புமாறும் டி.ஜி.பி. உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விரும்பத்தகாத செய்தியும், வதந்திகளும் பரவத் தொடங்கின.

இதையடுத்து, திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, ஆ. ராசா உள்ளிட்டோர் சென்னை கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தனர்.

பின்னர், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், தி.மு.க. தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளதாகவும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

கருணாநிதி ஆரோக்கியமாக உள்ளார் என்றும் சில பேரின் நப்பாசை, கெட்ட எண்ணம் காரணமாக இதுபோன்று செய்தியை பரப்புகின்றனர் என்று திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கூறினார்.

முன்னதாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார் என்றும் அவரது உடல்நலம் குறித்து பரவும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *