ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியிடப்பட்டதால் பெரும் சர்ச்சை ; வீடியோ இடைத்தேர்தலில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து…….

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ வெளியானது குறித்து தலைவர்களின் கருத்தை தற்போது காணலாம்….

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோ பதிவை வெளியிட்டது சரியான முறையில்லை என்று தெரிவித்தார்.

ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை முன்பே வெளியிட்டிருந்தால் இவ்வளவு பிரச்னை வந்திருக்காது என்றும், ஜெயலலிதாவின் மரணத்தையே அரசியலுக்கு பயன்படுத்தும் அளவிற்கு கீழ்த்தரமாக சென்று விட்டனர் என்றும் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோ வெளியானது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த வீடியோ இடைத்தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், ஜெயலலிதாவின் வீடியோ ஏன் ஓராண்டு காலம் மறைத்து வைக்கப்பட்டது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தங்கள் சுயநலத்திற்காக ஜெயலலிதா வீடியோவை வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் பழச்சாறு குடிக்கும் நிலைக்கு வந்த ஜெயலலிதா மரணமடையும் நிலைக்கு சென்றது எப்படி? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெளியான வீடியோ ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது எடுக்கப்பட்ட வீடியோ இல்லை என்றும், தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக இதுபோன்ற வீடியோவை வெளியிடுவது கண்டிக்கத்தக்கது என்றும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

ஓராண்டாக அப்பல்லோ நிர்வாகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பு மிரட்டி வருவதாக டிடிவி தினகரனின் ஆதரவாளர் தங்கத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெயலலிதாவை கொலை செய்தது சசிகலா என்று பொய் பிரச்சாரம் மேற்கொண்டதை மறுக்கவே வீடியோ வெளியிடபட்டதாக கூறியுள்ளார்.

மேலும் ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோ குறித்து பொதுமக்களும் தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *