ஜாஸ் சினிமாஸ் தொடர்பான ஆவணங்களை 2 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும்; ஜெயா டிவியின் தலைமை செயல் அதிகாரி விவேக்கிற்கு வருமான வரித்துறை உத்தரவு…

ஜாஸ் சினிமாஸ் தொடர்பான ஆவணங்களை 2 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஜெயா டிவி சிஇஒ விவேக்கிற்கு வருமானவரித்துறை உத்தரவிட்டுள்ளது.

வி.கே. சசிகலா குடும்பத்தினர் வசம் இருக்கும் ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் உள்ளிட்ட 180-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் இல்லம், ஜெயா டி.வி இயக்குநர் விவேக் இல்லம், மன்னார்குடியில் உள்ள சசிகலாவின் உறவினர்கள் இல்லம் என சோதனை நடைபெறும் இடங்கள் நீண்டு கொண்டே போயின. சசிகலாவின் உறவினர்கள் மட்டுமல்லாது முக்கிய ஆதரவாளர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களிலும் சோதனை நடந்தது. சுமார் 1800 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அனைத்து சோதனைகளும் முடிவடைந்த நிலையில், அப்போது சிக்கிய ஆவணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜாஸ் சினிமாஸ் குறித்து 2 நாட்களுக்குள் விளக்கம் தர வேண்டும் என்று ஜெயா டிவி சிஇஒ விவேக்கிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அந்த உத்தரவில், ஜாஸ் சினிமாஸுக்கு 11 திரையரங்குகள் கைமாறியது எப்படி? ஜாஸ் சினிமாஸுக்கு 11 திரையரங்குகளும் விற்பனை செய்யப்பட்டனவா? அல்லது குத்தகைக்கு விடப்பட்டனவா? என்பது குறித்து விவேக் விளக்கம் தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஜாஸ் சினிமாஸுக்கு திரையரங்குகள் விற்பனை செய்தது தொடர்பாக சத்யம் நிறுவனமும் ஆவணங்களைத் தாக்க செய்யவும் வருமான வரித்துறையினர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *