சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை ; லேப்டாப் மற்றும் கடிதங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்

21 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

வி.கே.சசிகலா உறவினரின் வீடுகள், ஜெயா டி.வி. அலுவலம் உள்ளிட்ட 187 இடங்களில் கடந்த 9-ம் தேதி முதல் 5 நாட்களுக்கு வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனை அழைத்துக் கொண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்றனர். அங்கு குவிக்கப்பட்டிருந்த காவல்துறை உதவியுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதையடுத்து, போயஸ் கார்டன் பகுதியில் ஜெயா டிவி சி.இ.ஓ. விவேக் மற்றும் டிடிவி தினகரனின் தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திடீரென தொண்டர்கள் பலர் அப்பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தொடர்ந்து நான்கு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற சோதனை அதிகாலை 2 மணியளவில் நிறைவு பெற்றது. பின்னர் அங்கு செய்தியாளர்களை சந்தித்த ஜெயா டிவி தலைமை செயல் அதிகாரி விவேக், வருமான வரித்துறை அதிகாரிகள் 2 பென் டிரைவ், லேப் டாப் மற்றும் கடிதங்களை எடுத்து சென்றதாக கூறினார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனின் ஆதரவாளர் வி.பி.கலைராஜன், போயஸ் கார்டனில் நடைபெற்ற வருமான வரி சோதனைக்கு மாநில அரசே முழுக்காரணம் என்று குற்றம் சாட்டினார்.

போயஸ் கார்டனில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதை அறிந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா அங்கு விரைந்தார். அவரை இல்லத்தின் உள்ளே விட காவல்துறையினர் அனுமதி மறுத்து விட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெ. தீபா, தமக்கு முறைப்படி நோட்டீஸ் கொடுக்காமல் சோதனை நடத்துவது தவறு என்று குற்றம் சாட்டினார்.

போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற்ற சோதனை குறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி.தினகரன், போயஸ் இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவோம் எனக்கூறிவிட்டு சோதனை நடத்துகிறார்கள் என்றும், வருமான வரித்துறை சோதனைக்கு எடப்பாடி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று கூறினார்.

போயஸ் கார்டனில் நடைபெற்ற சோதனையை தொடர்ந்து பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *