சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் அபார வெற்றி; 89 ஆயிரத்து 13 வாக்குகள் பெற்று புதிய சாதனை

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாற்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் அபார வெற்றி பெற்றார்.

ஆர்.கே.நகர் தேர்தலில் வாக்கு எண்ணும் பணிகள் சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெற்றது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முதல் இறுதி சுற்று வரை குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் முன்னிலை வகித்தார். ஒவ்வோரு சுற்றின் முடிவிலும் டிடிவி தினகரன் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட பல ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்றிருந்தார். இந்நிலையில் இறுதி சுற்றின் முடிவில் 89 ஆயிரத்து 13 வாக்குகள் பெற்று அவர் வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தப்படியாக 48 ஆயிரத்து 306 வாக்குகள் பெற்ற அதிமுக வேட்பாளர் இரண்டாம் இடத்தை பிடித்து டெப்பாசீட்டை தக்க வைத்து கொண்டார். மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 24 ஆயிரத்து 651 வாக்குகள் பெற்று டெப்பாசிட்டை இழந்தார். இதேபோன்று பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட 57 வேட்பாளர்கள தங்களது வைப்புத்தொகையை இழந்தனர். நோட்டாவுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைத்தது. பாஜகவின் வேட்பாளர் கரு.நாகராஜனால் ஆயிரத்து 417 வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது. டிடிவி தினகரன் தம்மை எதிர்த்து போட்டியிட்ட மதுசூதனனை 40 ஆயிரத்து 707 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் அங்கு விரைந்த டிடிவி தினகரனுக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தினகரனுக்கு, அதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரி பிரவீண் நாயர் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், தமது வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான் என்று கூறினார். இந்த வெற்றியைத் தொடர்ந்து முதலமைச்சர் அணியினர் மீண்டும் இணைந்து செயல்பட முன்வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அது குறித்து கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இடைத்தேர்தல்களில் இதுவரையில் சுயேச்சை வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெற்றதில்லை. முதன் முறையாக சுயேச்சை வேட்பாளராக டிடிவி தினகரன் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. டிடிவி தினகரன் வெற்றியை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவரது ஆதரளவாளர்கள் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கியும் வெற்றியை கொண்டாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *