சென்னையில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடு; மாநகர காவல்துறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசு வெடிப்பது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் துணிக் கடைகள், வணிக வளாகங்களில் மக்கள் புத்தாடைகள் வாங்கி வருகின்றனர். சென்னை தி.நகர், வேளச்சேரி, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைத்தும், கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தீபாவளி தினத்தன்று பொதுமக்கள் பட்டாசு வெடிக்க காவல்துறையினர் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும், அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேபோல், பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கும், காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கும் பொது மக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், பொது மக்களுக்கு இடையூராக பட்டாசு வெடிக்க கூடாது என்று குறிப்பிட்ட காவல்துறையினர், குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது அருகில் பெரியவர்கள் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *