கேரளாவை போல தமிழகத்திலும் தலித்துக்களை அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை

கேரள அரசைப் பின்பற்றி தமிழக அரசும் தலித்துகள் உள்ளிட்ட அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிப்பதற்கு முன்வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1924-ம் ஆண்டு தந்தை பெரியார் நடத்திய வைக்கம் போராட்டம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்றும் அதன் தொடர்ச்சியாகவே 1936-ல் கோயில் நுழைவு சட்டம் இயற்றப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். வைக்கத்தில் கோயில் இருந்த வீதி வழியாக நடப்பதற்கே போராட்டம் நடத்தப்பட்ட கேரளாவில் இப்போது இந்தியாவிலேயே முதல் முறையாக தலித்துகள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உத்தரவைப் பிறப்பித்துள்ள கேரள இடதுசாரி அரசாங்கத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமாரப் பாராட்டுவதாக எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் இயற்றி சமூக நீதியில் இந்தியாவுக்கே வழிகாட்டிய தமிழக அரசு, கேரள முன்மாதிரியைப் பின்பற்றி இங்கும் அர்ச்சகர்கள் நியமனங்களில் தலித்துகளுக்கு உரிய இடமளிக்க வேண்டுமென வலியுறுத்திய எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன், கேரள அரசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள கோயில்களில் அர்ச்சகர் பணியில் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு 32 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பது என கேரள அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதனடிப்படையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு இப்போது 62 அர்ச்சகர்களை நியமித்து ஆணை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதில் 26 பேர் பிராமணர்கள்; மீதமுள்ள 36 பேர் பிராமணரல்லாத சாதிகளைச் சேர்ந்தவர்கள்; அதில் தலித்துகள் 6 பேர் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பழமைவாதிகள் இன்றளவும் செல்வாக்கு செலுத்திவரும் கேரள கோயில்களில் தலித்துகள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய சமூகப் புரட்சியாகும் என தெரிவித்துள்ள எழுச்சித்தமிழர், இதை சாதித்துக் காட்டியிருக்கும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்றும் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று 2006 ஆம் ஆண்டு அன்றைய திமுக அரசு இயற்றிய சட்டத்தின் அடிப்படையில், தமிழ்நாட்டில் 2007 ஆம் ஆண்டு மாநில அரசு நடத்திய பயிற்சிப் பள்ளிகளில் சேர்ந்து தலித்துகள் உள்ளிட்ட பிராமணரல்லாத சாதிகளைச் சேர்ந்த 206 பேர் அர்ச்சகர் பயிற்சி பெற்றனர். ஆனால் அவர்கள் எவருக்கும் இதுவரை தமிழக அரசு பணிநியமன ஆணையை வழங்கவில்லை என்பது வேதனைக்குரியதாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசு இயற்றிய சட்டத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் தகுதி அடிப்படையில் அர்ச்சகர் பணி நியமனம் செய்யலாம் என ஒப்புக்கொண்டுள்ள நிலையில், தமிழக அரசு மவுனம் சாதிப்பது சமூகநீதிக்கு உகந்தது அல்ல என்றும் எனவே, உடனடியாக கேரள அரசைப் பின்பற்றி தமிழக அரசும் தலித்துகள் உள்ளிட்ட அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிப்பதற்கு முன்வர வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

======

தமிழக அரசுக்கு கோரிக்கை

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் இயற்றி சமூக நீதியில் இந்தியாவுக்கே வழிகாட்டிய தமிழக அரசு

கேரள முன்மாதிரியைப் பின்பற்றி இங்கும் அர்ச்சகர்கள் நியமனங்களில் தலித்துகளுக்கு உரிய இடமளிக்க வேண்டும்

கேரள அரசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள கோயில்களில் அர்ச்சகர் பணியில் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோருக்கு 32 விழுக்காடு இடஒதுக்கீடு

திருவிதாங்கூர் தேவசம் போர்டு இப்போது 62 அர்ச்சகர்களை நியமித்து ஆணை

26 பேர் பிராமணர்கள்; மீதமுள்ள 36 பேர் பிராமணரல்லாத சாதிகளைச் சேர்ந்தவர்கள்; அதில் தலித்துகள் 6 பேர்

கேரள கோயில்களில் தலித்துகள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய சமூகப் புரட்சியாகும்

இதை சாதித்துக் காட்டியிருக்கும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று 2006 ஆம் ஆண்டு அன்றைய திமுக அரசு சட்டம் இயற்றியது

தமிழ்நாட்டில் 2007 ஆம் ஆண்டு மாநில அரசு நடத்திய பயிற்சிப் பள்ளிகளில் சேர்ந்து தலித்துகள், அர்ச்சகர் பயிற்சி பெற்றனர்

அவர்கள் எவருக்கும் இதுவரை தமிழக அரசு பணிநியமன ஆணையை வழங்கவில்லை என்பது வேதனை

தமிழக அரசு இயற்றிய சட்டத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம்

தகுதி அடிப்படையில் அர்ச்சகர் பணி நியமனம் செய்யலாம் என ஒப்புக்கொண்டுள்ளது

தமிழக அரசு மவுனம் சாதிப்பது சமூகநீதிக்கு உகந்தது அல்ல

தமிழக அரசு, தலித்துகள் உள்ளிட்ட அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிப்பதற்கு முன்வர வேண்டும்

======

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *