காவிரி மேலாண்மை வாரியம் கோரி சாஸ்திரி பவன் முற்றுகை – மே 17 இயக்கத்தினர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருமுருகன் காந்தி தலைமையில் மே 17 இயக்கத்தினர் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதைத் தாமதப்படுத்திய மத்திய பாஜகவைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் மே 17 இயக்கத்தினர் சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலமான சாஸ்திரி பவனை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் கோஷமிட்டனர். போராட்டத்தில் மே 17 இயக்கத்தினர் மட்டுமில்லாமல், கல்லூரி மாணவர்கள், பெண்கள் பலரும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் காவலர்கள் குவிக்கப்பட்டு, போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சிலர் சாஸ்திரி பவன் அலுவல பதாகைகளை காலணிகளால் அடித்தும், மோடியின் புகைப்படத்தை தீயில் போட்டு எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கலவர சூழல் உருவானதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்களை காவல்துறை வலுக்கட்டாயமாக அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளது. எனினும் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.தமிழனின் வரிப்பணம் இனிக்குது ; காவிரி வாரியம் அமைக்கக் கசக்குதா ?என்றும் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *