கந்து வட்டிக்கொடுமை குறித்து 6 முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஏழைகூலிதொழிலாளி குடும்பத்துடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்ததில் தாய் மற்றும் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம், காசிதர்மம் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து, ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை கந்து வட்டிக்கு கடனாக வாங்கியுள்ளார். வட்டியுடன் சேர்த்து 2 லட்சத்து 34 ஆயிரம் வரை பணம் செலுத்திய பிறகும், கடன் கொடுத்தவர் தொடர்ந்து மிரட்டியுள்ளார். இந்தநிலையில், இசக்கிமுத்து தனது குடும்பத்துடன் வந்த நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்துவட்டி தொடர்பாக மனு அளித்தார். நான்கு முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், மனமுடைந்த இசக்கிமுத்து, தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்தார். பலத்த காயம் அடைந்த 4 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாவட்ட நீதிபதி மற்றும் அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று தீக்குளித்த இசக்கிமுத்து மற்றும் அவரது மனைவியிடம் வாக்குமூலம் பெற்றனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இசக்கிமுத்துவின் மனைவி சுப்புலட்சுமி, அவரது இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இசக்கிமுத்து ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக, காவல் உதவி ஆய்வாளர் முருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கந்துவட்டி கொடுமை காரணமாக, 4 பேர் தீக்குளித்தது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *