ஒக்கி புயல் பாதிப்பை, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்; பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்…

ஒக்கி புயல் பாதிப்பை, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

இதுக்குறித்து அவர் எழுதிய கடிதத்தில், ‘ஒக்கி’ புயலால், கன்னியாகுமரி மாவட்டம், பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது என்றும் இந்த புயலில் சிக்கி காணமல் போன மீனவர்களையும் கண்டுபிடிக்கும் வரை, தேடும் பணியை தொடர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். அரபிக் கடல் பகுதியிலும், குஜராத் மற்றும் மாலத்தீவு வரையிலும், மீனவர்களை தேடும்படி, பாதுகாப்புத் துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.

புயலால், கன்னியாகுமரி மாவட்டத்தில், மின் கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளன என்று தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேளாண் பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு சாலை மற்றும் குடிநீர் வசதியும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து ஒக்கி புயல் பாதிப்பை, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மேலும் சேத மதிப்பு குறித்து விரிவான விபரம், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு, உரிய நிதியுதவியை மத்திய அரசு வழங்க வேண்டும் எனவும் அவர் கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஒக்கி புயலில் சிக்கி மரணமடைந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு, தலா 10 லட்ச ரூபாயும், காயமடைந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட முடியாத நிலைக்கு ஆளான மீனவர்களுக்கு தலா 5 லட்ச ரூபாயும் வழங்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஒக்கி புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணிகள் குறித்து, தலைமைச் செயலகத்தில், மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில், தேடுதல் பணிகள் முடிவடைந்து, காணாமல் போன மீனவர்கள் குறித்த இறுதி அறிக்கை கிடைத்த பின்னர், மாயமானவர்களை இறந்தவர்களாக கருதி உரிய நிவாரணம் வழங்கப்படும் என உறுதியளித்தார். மேலும் ஒக்கி புயலில் சிக்கி மரணமடைந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு காப்பீடு உதவியாக ரூபாய் 2 லட்சம் உட்பட தலா 10 லட்சம் ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களுக்கு நிவாரணமாக தலா 50 ஆயிரம் ரூபாயும், மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட அனைத்து மீனவர் குடும்பங்களுக்கும் தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதனிடையே பிற மாநிலங்களில் கரை சேர்ந்த மீனவர்களின் கோரிக்கையை ஏற்று விசைப்படகு மற்றும் நாட்டு படகுகளுக்கான டீசல் உதவியை அதிகரித்திருப்பதோடு, உணவுப்படி 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பதாகவும் தனது அறிக்கையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *