ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று நேரில் ஆய்வு செய்கிறார் பிரதமர் மோடி; புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு 516 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது மத்திய அரசு……

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், கேரளா, லட்சத்தீவு பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் பார்வையிடுகிறார். இதனிடையே பாதிப்புக்குள்ளான தமிழகத்திற்கு மத்திய அரசு 516 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

ஒகி புயலால் தமிழகம், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமான மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்ததுடன், பயிர்களும் சேதமடைந்தன. கடலுக்குச் சென்ற மீனவர்கள் பலர் இன்னும் கரை திரும்பாத நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி இன்று பார்வையிடுகிறார். காலையில் லட்சத்தீவின் அகாத்தி என்ற இடத்தில் ஆய்வு மேற்கொள்ளும் பிரதமர் மோடி, பிற்பகலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் சேதமடைந்த பகுதிகளை நேரில் பார்வையிடுகிறார். பின்னர் பாதிக்கப்பட்ட மீனவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறுகிறார். இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கன்னியாகுமரி முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்குள்ள விடுதிகளில் தங்கியுள்ள வெளிமாநிலத்தவர் மற்றும் வெளி நாட்டினர் குறித்த விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வைத்துள்ளனர். பிரதமரின் வருகையையொட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் இன்று கன்னியாகுமரிக்கு செல்கின்றனர். இதனிடையே ஒகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு 561 கோடி ரூபாய் நிதியையும், கேரளாவுக்கு 153 கோடி ரூபாய் நிதியையும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. மேலும் ஒக்கி புயல் பாதிப்பு தொடர்பான மீட்புப்பணிகளை மத்திய அரசு 24 மணிநேரமும் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *