உலகம் முழுவதும் புனித வெள்ளி இன்று அனுசரிப்பு..!

வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் மறைவே, ‘பெரிய வெள்ளி’யாக
அனுசரிக்கப்படுகிறது.இயேசு இறந்த நாளுக்கு முன்புள்ள நாற்பது நாட்கள் ‘தவக்காலம்’ எனப்படுகிறது.
தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் சுகபோகத்தை வெறுத்து உபவாசம் மேற்கொள்கின்றனர். பெண்கள் ஆடம்பரம், அலங்காரத்தை தவிர்த்து, அர்ப்பண வாழ்வை நடத்துகின்றனர். மங்கல நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. சுக போகத்தை ஒதுக்குவதால் மிச்சப்படும் பணத்தில் ஏழைகளுக்கு உதவி செய்து புண்ணியம் சம்பாதித்துக் கொள்கின்றனர்.
கிறிஸ்து இயேசு பிறப்பதற்கு முன்பிருந்த காலக்கட்டம் பழைய ஏற்பாட்டு காலம் என்றும்,
பின்புள்ள காலம் புதிய ஏற்பாட்டு காலம் எனப்படும்..பழைய ஏற்பாட்டு காலத்தில் யூதர்களிடையே ஒரு பழக்கம் இருந்தது. பாவம் செய்த மனிதன், தன் பாவங்களுக்கு பரிகாரம் தேடி ஒரு
ஆட்டுக்குட்டியை தேர்ந்தெடுப்பான். அந்த ஆட்டை பலிபீடத்திற்கு எடுத்து வந்து, அதன் மீது தன் கைகளை வைத்து தனது பாவங்களை அறிக்கையிடுவான். பலியிடும் ஆசாரியன் அந்த ஆட்டை பலிபீடத்தின் மீது கிடத்தி பலி கொடுப்பான். அதன் ரத்தத்தை பாவம் அறிக்கையிட்ட மனிதன் மீது தெளித்து ‘ இந்த ஆடு மரித்ததன் மூலம் உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ எனக்கூறி அனுப்பி விடுவான்.
இந்த பின்னணியில் தான் ‘பலிஆடு’ என்ற சொற்றொடர் வழக்கிற்கு வந்தது. ஒருவர் செய்யும்
தவறுகளுக்கு வேறொருவர் தண்டனை ஏற்கும் நிலை வந்தால் அவரை ‘பலிஆடு’ என
குறிப்பிடுவது இதன் அடிப்படையில் தான்.அந்த வகையில் இயேசு கிறிஸ்து உலக மக்களின் பாவத்தினை ஏற்று தன்னையே சிலுவை மரத்தில் பலியாக தந்ததால், ‘இயேசு கிறிஸ்து உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி’ என பைபிளில் கூறப்பட்டுள்ளது.
இயேசு கிறிஸ்து மக்களுக்கு நல்ல அறிவுரைகளை வழங்கினார். நோய் தீர்த்தும், உயிர் கொடுத்தும் நன்மை செய்தார். அவரது வழிகாட்டுதலை மக்கள் பின்பற்றினால், தங்கள் பிழைப்பிற்கு கேடு வரும் என சமயத்தலைவர்கள் அஞ்சினர். எனவே அவர் மதவிரோத செயலில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தினர். தலைமைக் குருவாய் இருந்த கயாபா என்பவரின் மாமனாரான அன்னா, மக்களை தங்கள் வழிக்கு கொண்டு வர வேண்டுமென்றால் இயேசுவை கொன்றால் போதும் என்ற கருத்து தெரிவித்தார்.
மக்கள் எல்லோருக்காகவும், அவர்களின் பாவங்களுக்காகவும் பலி ஆடாக இயேசு அவர்கள் பாவங்களை தன் மேல் ஏற்று, தன் ஜீவநாடகத்தை முடித்ததன் மூலம் மக்கள் அனைவரின்
பாவங்களுக்கும் பரிகாரமானார்.புனிதவெள்ளி நாளில் பாவம் இல்லாத உலகை உருவாக்க அனைவரும் உறுதியேற்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *