உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பிரான்ஸ்

உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி, பிரான்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க ஆக்ரோஷத்துடன் போராடினர். பெல்ஜியம் அணிக்கு பலமுறை கோல் அடிக்க வாய்ப்பு இருந்தபோதிலும் பிரான்ஸ் அணியின் கோல்கீப்பர் ஒன்றைக்கூட கோலாக்க விடவில்லை.

அதேபோல் பெல்ஜியம் கோல்கீப்பரும் அபாரமாக செயல்பட்டதால் முதல் பாதியின் முடிவில் பிரான்ஸ் அணியாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் சாமுவேல் அபாரமாக ஒரு கோல் போட்டு தனது அணியை 1-0 என முன்னிலைப்படுத்தினார். அதன்பின்னர் பெல்ஜியம் அணி கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்காததால் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டிகள் குரோஷியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி பிரான்சுடன் இறுதிப் போட்டியில் விளையாடும்.

இதனிடையே, பாரிஸ் நகரில் பெரிய திரைகளில் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த பிரான்ஸ் ரசிகர்கள் வெற்றியை ஆரவாரத்துடன் கொண்டாடினர். அப்போது சிலர் சாலைகளில் குப்பைகளை எரித்தும், சாலைத் தடுப்புகளை வீசியும் ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து, கண்ணீர் புகைவீசி அவர்களை போலீசார் கலைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *