உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை; விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பட்டாசுகள் வெடித்து வரவேற்பு…

உடுமலை சங்கர் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி கவுசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து திருப்பூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி உடுமலை பேருந்து நிலையத்திற்கு சென்ற சங்கர் –கவுசல்யா தம்பதியினரை மோட்டார் சைக்கிளில் வந்த கூலி படையினர் சரமாரியாக அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங் களால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த சங்கர் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கவுசல்யா உயிர்தப்பினார். இதையடுத்து கூலிப்படை மூலம் கொலை செய்ததாக கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, மாமன் பாண்டித்துரை, மற்றும் செல்வகுமார், மதன், ஜெகதீசன், மணிகண்டன், கலை தமிழ்வாணன், மற்றொரு மணிகண்டன், தன்ராஜ், பிரசன்ன குமார் ஆகிய 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த ஓராண்டாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட 8 பேர் குற்றவாளிகள் என நீதிபதி அலமேலு நடராஜன் தீர்ப்பளித்தார். தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டிதுரை, பிரசன்ன குமார் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இதனையடுத்து, குறைந்த பட்ச தண்டனை வழங்குமாறு குற்றவாளிகள் தரப்பு நீதிபதியிடம் முறையிட்டனர். அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அரசுத்தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, சின்னசாமியின் நண்பர் ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், கலை தமிழ்வாணன், மதன் ஆகிய ஆறு பேருக்கு தூக்கு தண்டனை விதிப்பதாக தீர்ப்பளித்தார். ஸ்டீவன் தன்ராஜ்க்கு இரட்டை ஆயுள் தண்டனையும், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தந்த மணிகண்டனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார். கவுசல்யாவின் தந்தைக்கு மரண தண்டனையுடன் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப் பட்டுள்ளது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கவுசல்யா தமது கணவர் சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்துள்ளது என்றும் , தம்முடன் சட்டப் போராட்டம் நடத்திய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

திருப்பூர் நீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பு ஆணவ கொலைகளுக்கு கிடைத்த சம்மட்டி அடி என்றும், இந்த தீர்ப்பு ஆணவ கொலைக்கு முயற்சிப்பவர்களுக்கு பெரிய பாடம் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர் . இது போன்ற வன்செயல்களில் ஈடுபட முயற்சிப் பவர்கள் மனம் திருந்த வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே உடுமலை சங்கர் கொலை வழக்கின் தீர்ப்புக்கு வரவேற்பளித்து அரியலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விடுதலை சிறுத்தை கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *