இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கில் இழுபறி நீடிப்பு ; அடுத்த கட்ட விசாரணை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைப்பு….

இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பது தொடர்பான அடுத்த கட்ட விசாரணையை வரும் 30 ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.

அதிமுகவின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலை யாருக்கு என்பது தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மூன்றாவது கட்டமாக நேற்று பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் ஆணையத்தில் விசாரணை தொடங்கியது. ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணி ஆதரவாளர்களும், டிடிவி தினகரன் தரப்பு ஆதரவாளர்களும் விசாரணைக்காக தேர்தல் ஆணையத்தில் ஆஜராகி இருந்தனர்.

விசாரணையின் போது, பிரதமர் மோடியின் ஆதரவு தங்களுக்கு இருப்பதால் இரட்டை இலைச் சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொதுக்கூட்டத்தில் பேசியது குறித்து டிடிவி தினகரன் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 10 பிரமாணங்கள் போலியானவை என்றும் டிடிவி தினகரன் தரப்பில் வாதிடப்பட்டது. விசாரணையைத் தாமதப்படுத்த முயற்சிக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டை தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் மறுத்தனர். தினகரன் தரப்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து இரட்டை இலை விவகாரம் தொடர்பான விசாரணையை வரும் 30ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.

இந்நிலையில், தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி, ஓ.பன்னீர்செல்வம் விரைவில் பாஜகவில் இணைவார் என்றும் எடப்பாடி பழனிசாமியுடம், ஓ. பன்னீர்செல்வம் சேர்ந்து அதிமுக கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் டெல்லி வீதியில் அடகு வைத்து விட்டார்கள் என்று குற்றம்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *